• முகப்பு பக்கம்
  • Sponsor
  • ஆசிரியர் பற்றி
  • அணிந்துரை
  • கொங்கு வேளாளர் குலங்கள்
  • தொடர்பு கொள்ள
  • குலங்கள் - குலதெய்வங்கள்
  • திருமணங்களும் - குலங்களும்
  • சேர்ப்பதற்கு

                                                                                                                      அணிந்துரை


  தருமபுரி மாவட்டத்தில் கொங்கு வேளாளர் என்ற நூலுக்கு 2004ஆம் ஆண்டு புலவர் செ. இராசு அவர்கள் அளித்த அணிந்துரை  
     
  புலவர் செ. இராசு, எம்.ஏ., பிஎச்.டி.,
முன்னாள் தலைவர்
கல்வெட்டு - தொல்லியல் துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம் - தஞ்சாவூர்.
 
     
  டாக்டர் மணிமேகலை புஷ்பராஜ் அவர்கள் ஆய்வு செய்து எழுதிய ‘தருமபுரி மாவட்டத்தில் கொங்கு வேளாளர்’ என்ற அரிய சமூக வரலாற்று நூலைப் படிக்கும் வாய்ப்பைப் பெற்றேன்.  
     
  "கொங்கு வேளாளர் திருமணச் சடங்குகள்" என்னும் தலைப்பில் விரிவாக ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் சிறப்புடன் டாக்டர் பட்டம் பெற்ற அவர்கள் தம் ஆய்வைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் அழகிய முறையில் நூலாக வெளியிட்டு அறிஞர்கள் பலரால் பாராட்டப் பெற்றதை நாம் அறிவோம்.  
     
  கங்கர் நாட்டின் தெற்கிலும், கொங்கு நாட்டின் வடபகுதியிலும் அமைந்த எல்லை நிலப்பகுதி தருமபுரி மாவட்டம். அங்கு வாழும் மக்கள் தொகையில் சிறுபான்மையினராக இருந்தாலும் பல துறைகளில் முன்னணியில் சிறப்புற்று விளங்கும் கொங்கு வேளாளர் பெருமக்கள், அப்பகுதி மக்களுடன் வாழ்விலும் வளத்திலும் இரண்டறக் கலந்துள்ளனர். அம்மண்ணின் மைந்தர்களாக மாறித் தங்கள் கடும் உழைப்பால் காடு திருத்திக் கழனியுண்டாக்கி, மேட்டுப் பகுதியைத் தோட்டமாக்கி, குளம் வெட்டி வளம் பெருக்கி வாழ்வாங்கு வாழ்ந்து வருகின்றனர். இதனை ஒரு கல்வெட்டு, ‘சாமை விளையும் பூமியைச் சம்பா விளையும் பூமியாக’ மாற்றியதாகக் கூறும்.  
     
  இவ்வாறு கொங்கு நாட்டின் பிற பகுதிகளிலிருந்து தருமபுரி மாவட்டத்தில் கொங்கு வேளாளர்கள் குடியேறியதை இந்நூலாசிரியர் இரண்டு காலகட்டமாகப் பிரித்துக் கூறப்படுவதைச் சுட்டிக்காட்டுகிறார்  
     
  அவர்கள் 20 ஆம் நூற்றாண்டுக்கு முன்பும் அதற்குப் பின்பும் அங்குக் குடியேறிவர்கள் ஆவர். அவர்கள் முறையே, ‘வடக்கத்திக் கவுண்டர்கள்’ என்றும், ‘தெற்கத்திக் கவுண்டர்கள்’ என்றும் அழைக்கப்படுவர்.  
     
  மெல்ல மெல்லக் கொங்கு வேளாளர்களின் மிக முக்கியமான அடையாளக் குறியீடாகிய குலப்பெயர்களை மறந்து, ஆனால் குடியேறிய மக்களில் சகோதரர் முறையார் எவர் எவர், மாமன் மைத்துனன் முறையார் எவர் எவர் என்பதை அறிந்து தங்களுக்குள் திருமண உறவை வைத்துக் கொண்டனர்.  
     
  முன்னர்க் குடியேறிய, ‘வடக்கத்திக் கவுண்டர்கள்’ முதியவர்கள் சிலர் தங்கள் பூர்வீகக் காணி, குலம் இவைகளைப் பற்றி அறிந்திருந்தாலும் அவற்றை இளைய தலைமுறையினருக்கு முறைப்படி அறிவிக்கவில்லை. இளைய தலைமுறையினர் அவை பற்றி அறிந்து கொள்ளக் கவலைப்படவுமில்லை  
     
  இருப்பினும் தருமபுரி மாவட்டத்தில் குடியேறிய கொங்கு வேளாளர்களாகிய வடக்கத்திக் கவுண்டர்கட்கும், தெற்கத்திக் கவுண்டர் மற்றும் கொங்கு நாட்டில் வசிக்கும் இதர பகுதி கொங்கு வேளாளர்கட்கும் திருமண உறவுகள் ஏற்படத் தொடங்கின.  
     
  பின்னர்க் குடியேறிய தெற்கத்திக் கவுண்டர்களில் கொங்கு வேளாளர், கொங்கு நாட்டு வேளாளர் (நாட்டுக் கவுண்டர்) என இரு பிரிவினர் இருந்தனர். இருவரும் கொங்கு வேளாளர் என ஒரே பிரிவில் அடங்குவர். திருமண உறவுகளும் ஏற்பட்டு வருகின்றன.  
     
  ‘கொங்கு நீரோட்டத்தில் கலக்கவும், புதிய திருமண உறவுகள் ஏற்படவும்’தருமபுரி மாவட்டத்தில் மட்டுமல்ல, வெளிநாடுகளில் வாழும் கொங்கு வேளாளர் பெருமக்களுக்கும் குலப்பிரிவு அடையாளம் அவசியம் தேவை என்பதை நூலாசிரியர் நன்கு விளக்குகிறார்.  
     
  இவ்வகையில் தருமபுரி மாவட்டக் கொங்கு வேளாளர் பெருமக்கள் ‘தனித் தீவாக’ விளங்குவதைக் கண்டு டாக்டர் மணிமேகலை புஷ்பராஜ் அவர்கள் கடந்த ஐந்தாண்டுகள் கள ஆய்வில் ஈடுபட்டு, சில கொங்கு வேளாளர் குடும்பங்களினுடைய குலங்களையும், பூர்வீகக் காணியையும், குடியேறிய இடங்களில் குடிபாட்டுக் கோயில்கள் ஏற்படுத்தி வழிபட்டு வரும் நிலையையும் கண்டுபிடித்து விளக்கமாகத் தக்க சான்றுகளுடன் எழுதியுள்ளார். இது பாராட்டத்தக்க நல் முயற்சியாகும்.  
     
  இந்த ஆய்வுநூல் தங்கள் பூர்வீகக் கொங்கு வேளாளர் குலங்களையும், காணியூர்களையும் தருமபுரி மாவட்டக் கொங்கு வேளாளர்கள் அறிந்து கொள்ளும் முயற்சியில் வழிகாட்டியாகவும், கலங்கரை விளக்கமாகவும், விடிவெள்ளியாகவும் திகழுகிறது என்பதில் ஐயமில்லை.  
     
  கொங்கு வேளாளர் சமுதாய வரலாற்றில் அடிப்படைத் தேவையான ஒரு புதிய முதல் முயற்சியில் டாக்டர் மணிமேகலை புஷ்பராஜ் அவர்கள் ஈடுபட்டு வெற்றியும் கண்டுள்ளார்கள்.  
     
  கொங்கு வேளாளர் சமுதாய வரலாற்றில் புதிய அத்தியாயம் படைத்துள்ள டாக்டர் மணிமேகலை புஷ்பராஜ் அவர்கள் இம்முயற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டு இதுபோன்ற ஆய்வு நூல்களை வெளியிட வேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன்.  
     
  கொங்கு வேளாளர் சமூகத்தின் இலக்கியக் கொடுமுடியாகத் திகழ்ந்துவரும் நம்முடைய தமிழறிஞர் முனைவர் சிலம்பொலி சு.செல்லப்பனார் அவர்கள் கொங்குச் சமுதாயத்திற்குக் கொடுத்த பெருங்கொடை அவருடைய அருமைத் திருமகளார் டாக்டர் மணிமேகலை புஷ்பராஜ் அவர்கள் ஆவார்.  
     
  டாக்டர் மணிமேகலை புஷ்பராஜ் அவர்களின் ஆய்வை மனமாரப் பாராட்டி மகிழ்கிறேன். வாழ்த்துகள்.  
     
  ஈரோடு  
  அன்பன்  செ.இராசு  
     
     

 ---------------------------------------------------------------------------------      Copyright @ dharmapurikongu.com   -------------------------------------------------------------------------